search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலெக்டர் அன்பழகன்"

    கரூர் தொகுதி தேர்தலை ரத்து செய்வது குறித்து ஆணையம் தான் முடிவு எடுக்கும் என்று மாவட்ட கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான அன்பழகன் தெரிவித்தார். #KarurPolls #CollectorAnbazhagan
    கரூர்:

    கரூர் பாராளுமன்ற தொகுதியில் நேற்று மாலையுடன் பிரசாரம் முடிந்தது. இதற்கிடையே அ.தி.மு.க. மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் ஒரே இடத்தில் பிரசாரத்தை நிறைவு செய்வதில் போட்டி ஏற்பட்டு பெரும் வன்முறை வெடித்தது.

    இதில் போலீசார் மற்றும் பொதுமக்கள் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் வேட்பாளர் ஜோதி மணி கூறுகையில், கரூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய சதி நடப்பதாக தெரிவித்தார்.

    மேலும் கரூர் மாவட்ட கலெக்டர் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகவும் கூறி டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் வக்கீல் மூலம் புகார் மனு அளித்துள்ளார்.

    இந்த புகார் தொடர்பாக கரூர் மாவட்ட கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான அன்பழகன் கூறுகையில், கரூர் பாராளுமன்ற தொகுதி நிலவரம் குறித்து தேர்தல் ஆணையத்திற்கு தெரிவித்தேன். கரூர் தொகுதி தேர்தலை ரத்து செய்வது குறித்து ஆணையம் தான் முடிவு எடுக்கும்.

    காய்ந்த மரம் தான் கல்லடி படும், நேர்மையாக இருப்பவர்கள் மீது புகார் கூறுவது இயல்புதான்.

    இவ்வாறு அவர் கூறினார். #KarurPolls #CollectorAnbazhagan
    ஒரே இடத்தில் இறுதி கட்ட பிரசாரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது தொடர்பாக தி.மு.க.வினர் வீடு புகுந்து தன்னை மிரட்டியதாக கரூர் மாவட்ட கலெக்டர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #KarurCollector #DMK
    கரூர்:

    கரூரில் இன்று மாலை பாராளுமன்ற தேர்தல் இறுதி கட்ட பிரசாரம் நடக்கிறது. மனோகரா கார்னரில் இறுதிக்கட்ட பிரசாரத்தினை நிறைவு செய்வதில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியினரிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

    நேற்று முன்தினம் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதி மணி, மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் தங்களுக்கு முதலில் வழங்கிய இறுதி கட்ட பிரசார நேர அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி கரூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் உதவி தேர்தல் அதிகாரி சரவணமூர்த்தியை சந்தித்து முறையிட்டு உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். பின்னர் இது தொடர்பாக தேர்தல் பார்வையாளர் விசாரணை நடத்தி காங்கிரஸ் வேட்பாளருக்கு அனுமதி வழங்கினார்.

    இந்த நிலையில் நேற்று இரவு கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்பட கட்சியினர் திரண்டு சென்று மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான அன்பழகனிடம் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட பிரசார நேரத்தில் பிரசாரத்தை நடத்த அனுமதிக்குமாறு மனு கொடுத்தனர்.

    இந்த விவகாரம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தநிலையில் இன்று கரூர் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான அன்பழகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-



    கடந்த சில தினங்களாக அதிகாரிகளுக்கு அதிகமாக அச்சுறுத்தல் வந்து கொண்டிருக்கிறது. நேற்று நள்ளிரவில் 12.45 மணிக்கு கரூர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செந்தில் பாலாஜி உத்தரவின்பேரில் கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியின் அறிவுரையின் பேரில் வக்கீல் செந்தில் என்பவர் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினருடன் எனது வீட்டிற்கு வந்தார்.

    மேலும் தகராறு செய்து வீட்டிற்குள் நுழைய முற்பட்டார்கள். நான் உடனே செந்தில் என்பவரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினேன். இறுதி கட்ட பிரசாரம் தொடர்பாக இன்று காலை அலுவலகத்திற்கு வந்து மனு கொடுங்கள் என்றேன். சுமார் 100-க்கும் மேற்பட்டோர் 20 முதல் 30-க்கும் மேற்பட்ட இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் வந்து எனது உயிருக்கும், எனது குடும்பத்திற்கும் அச்சுறுத்தல் கொடுக்கும் வகையில் வீட்டிற்குள்ளேயே நுழைய முயன்றனர்.

    நான் இது தொடர்பாக தேர்தல் ஆணையம் மற்றும் காவல் துறையிடம் புகார் செய்தேன். மாவட்ட போலீஸ் எஸ்.பி. சம்பவ இடத்திற்கு வந்து எங்களை பாதுகாத்தார். நடுநிலையோடு பணியாற்றும் எங்களை தடுப்பது எந்த விதத்தில் நியாயம். செந்தில் பாலாஜி, ஜோதிமணி மற்றும் தி.மு.க.வினர் நேற்று முன்தினம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரை சுமார் 6 மணி நேரம் சிறைப்பிடித்து வைத்திருந்தனர். அவரும் மனிதர் தானே.

    சிறைப்பிடித்த காரணத்தினால் வேறு வழியில்லாமல் தர்மசங்கடமான நிலையில் பிரசாரத்திற்கு அனுமதி கொடுத்துள்ளார். நேற்று இரவு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அ.தி.மு.க. வேட்பாளர் தம்பிதுரையை ஆதரித்து இறுதிகட்ட பிரசாரத்திற்கு அனுமதி கேட்டிருந்தார். அதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தேன்.

    இந்த அனுமதி விவகாரம் மதுரை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்துள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவரான எனக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண பொதுமக்களுக்கு என்ன பாதுகாப்பு. எனது உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #KarurCollector #DMK
    மாணவ பருவத்திலிருந்தே மனிதநேயத்தை வளர்க்க வேண்டும் என்று கரூர் கலெக்டர் அன்பழகன் பேசினார்.
    கரூர்:

    ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் ஆண்டு தோறும் ஜனவரி மாதம் 24-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை ஒருவார காலம் மனிதநேய வார விழா கொண்டாடப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில் கரூர் தாந்தோனி மலையில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் மனித நேய வார தொடக்க விழா நடந்தது. இதில் மாணவ-மாணவிகளால் "மனித நேயம் காப்போம்'' என்ற தலைப்பில் உருவாக்கப்பட்ட வரைபடங்கள் அடங்கிய கண்காட்சியினை கலெக்டர் அன்பழகன் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    மனித நேயத்தை மக்கள் மனதிலும், மாணவர்களின் மனதிலும் விதைக்கும் வகையில் கருத்தரங்குகள், கலை இலக்கியப்போட்டிகள், மேடை நாடகங்கள் என பல்வேறு வகையிலும் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகின்றது.

    மாணவ சக்தி என்பது அளப்பரியது. மாணவப் பருவத்தில் இருந்தே மனித நேயத்தை வளர்க்கும் பழக்கத்தை நீங்கள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். மனித நேயமே அன்பையும், இரக்கத்தையும், நேசத்தையும் உங்களிடத்தில் ஏற்படுத்தும். நல்ல மனிதனாக வாழ மனிதநேயமே அடிப்படைத்தகுதியாகும்.

    எனவே, மாணவர்களாகிய நீங்கள் உங்களிடத்தில் மட்டு மல்லாது, உங்கள் நண்பர்கள், உறவினர்களிடத்திலும் மனிதநேயத்தின் முக்கியத்துவத்தை விளக்க வேண்டும். இங்கே உங்களால் வரையப்பட்டு காட்சிப் படுத்தப்பட்டுள்ள அருமையான ஓவியங்கள், மனிதநேயம் சார்ந்த வரை படங்கள் வெறும் படமாக மட்டும் இருந்திடாமல் அனைவருக்கும் பாடமாகவும் அமைய வேண்டும். இணையதளம் இன்றியமையாததாகி இருக்கும் காலம் இது. உங்களுக்குத் தேவையான அனைத்துத் தகவல்களையும் நீங்கள் இருக்கும் இடத்திற்கே கொண்டு வந்து சேர்க்கும் "இந்தகாலத்தின் அற்புத விளக்கே'' இணையதளம். மாணவர்கள் இணைய தளத்தை முறையாகப் பயன்படுத்தி நீங்கள் நினைக்கும் துறையில் வல்லுநர்களாக உயர வேண்டும். 

    அதே போல புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை நீங்கள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். திருக்குறளில் இல்லாத செய்திகளே இல்லை. நமது வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து செய்திகளையும் அன்றே தொகுத்து பாடல்களாக வழங்கியிருக்கிறார் தெய்வப் புலவர் திருவள்ளுவர். அனைவரும் திருக்குறள் படிக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலு வலர் லீலாவதி, அரசுக் கலைக்கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன், தாசில்தார்கள் அம்பாயிரநாதன், கற்பகம், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலக கண்காணிப்பாளர் கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    டெங்கு கொசு உருவாக காரணமானவர்களுக்கு அபராதம் விதித்து மாவட்ட கலெக்டர் அன்பழகன் நடவடிக்கை எடுத்தார்.
    கரூர்:

    கரூர் நகராட்சிக்கு உட்பட்ட 29-வது வார்டு திருமாநிலையூர் பகுதியில் நடைபெற்று வரும் டெங்கு தடுப்புப்பணிகளை மாவட்ட கலெக்டர் அன்பழகன், நேற்று வீடு வீடாக சென்று ஆய்வு செய்தார். அப்போது வீடுகளுக்குள் வைக்கப்பட்டிருந்த குடிநீர்த்தொட்டி, குளிர்சாதனப்பெட்டியின் பின்புறம் நீர் இருக்கும் டப்பாக்களில் கொசுப்புழுக்கள் உற்பத்தியாவதற்கான வாய்ப்பினை கலெக்டர் சுட்டி காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பின்னர் டெங்கு, பன்றி காய்ச்சலை தடுப்பது குறித்த துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. அப்போது அந்த பகுதியில் பழைய சாயப்பட்டறை இருந்த இடத்தில் தேவையில்லாத பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் மட்டைகள், கழிவுப்பொருட்கள் அதிக அளவில் வைக்கப்பட்டிருந்தது. இதனை கண்ட மாவட்ட கலெக்டர், இதுபோன்ற கழிவு பொருட்களில் மழைநீர் தேங்கினால் டெங்கு கொசு உற்பத்தி பல மடங்கு அதிகரிக்கும் என கூறியும் இதனை அப்புறப்படுத்தாமல் வைத்திருக்கிறீர்களே?. இனி அபராத நடவடிக்கை எடுத்தால் தான் சரிபட்டு வரும் என அந்த இடத்தின் உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுத்தார். பின்னர் அவருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப் பட்டது.

    இதேபோல் ஆட்டோவிற்கான உதிரிபாகங்கள், டயர்கள் போன்ற கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாமல் சாலையின் ஓரம் போட்டு வைத்திருந்த நபருக்கும், வீடுகளில் உள்ள தண்ணீர்த்தொட்டியில் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் வகையில் உரிய பராமரிப்பின்றி வைத்திருந்த வீட்டின் உரிமையாளர்கள் இருவருக்கும் என மொத்தம் 4 பேருக்கு தலா ரூ.500 வீதம் ரூ.2,000 அபராதத்தொகையாக வசூலிக்க நகராட்சி மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். மேலும், அடுத்த முறை ஆய்வுக்கு வரும்போது இதுபோன்ற செயல்கள் தொடர்ந்தால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சம்பந்தப்பட்ட நபர் களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

    அதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கலெக்டர், அங்கு தேவையில்லாத டயர்களை மழைநீரில் நனையாமலும், நீர் தேங்காமலும் அப்புறப்படுத்தி தூய்மையாக வைத்துக்கொள்ளுமாறு அங்கிருந்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது சுகாதாரப்பணிகளின் துணை இயக்குனர் நிர்மல்சன், நகர்நல அதிகாரி ஆனந்தகுமார், வட்டாட்சியர் ஈஸ்வரன் உள்பட பலர் உடனிருந்தனர்.
    கரூர் மாவட்டத்தில் டெங்கு தடுப்பு பணிகள் குறித்து 48 வார்டுகளை கண்காணிக்க 225 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
    கரூர்:

    கரூர் மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் டெங்கு தடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. பொதுமக்களுக்கு டெங்கு நோயை பரப்பும் கொசுக்கள் பற்றியும், எவ்வாறு அவை பரவுகின்றது என்பது குறித்தும், டெங்கு கொசுக்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்தும் பொதுமக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் கரூர் நகராட்சிக்குட்பட்ட பாரதிதாசன் நகர் பகுதியில் நடைபெற்று வரும் டெங்கு தடுப்பு பணிகளை மாவட்ட கலெக்டர் அன்பழகன் வீடு, வீடாகச் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    கரூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் ஊரக பகுதிகளுக்கும், நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளுக்கும், குறு வட்ட அளவிலும் வார்டு வாரியாகவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை கண்காணித்திட அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு அனைத்து பகுதிகளிலும் தீவிர டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் எவ்வாறு பரவுகின்றது என்பது குறித்தும், டெங்கு வராமல் தடுக்க நாம் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. கரூர் நகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளில் நிரந்தர பணியாளர்களும், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களும், டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    தினக்கூலி அடிப்படையில் 225 நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் ஒரு நபர் நாள் ஒன்றுக்கு 50 வீடுகள் வீதம் ஒரு நாளைக்கு 11,250 வீடுகளில் ஆய்வு செய்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறார்கள். இப்பணியாளர்கள் சுழற்சி முறையில் இந்த பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    டெங்கு தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளும் அலுவலர்கள் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் குடிநீரை மூடி வைத்து தூய்மையாகப் பயன்படுத்துகிறார்களா? என்று ஆய்வு செய்கின்றனர். நீர்த்தொட்டிகளில் குளோரின் பவுடர் தெளித்தும், மருந்துகள் தெளித்தும் வருகின்றனர்.

    நீரை முறையாக மூடி வைக்காமல் இருந்தாலோ, சுற்றுப்புறங்களில் நீர் தேங்கியிருந்தாலோ அதுகுறித்து போதிய விழிப்புணர்வு வழங்கி வருகிறார்கள். ஏடிஎஸ் கொசு குறித்தும் அதன் வளர்ச்சி குறித்தும் பொது மக்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டு வருகின்றது. மேலும் அப்பகுதியில் வழங்கப்படும் குடிநீரில் உள்ள குளோரிநேசன் அளவு பரிசோதிக்கப்படுகிறது.

    பொதுமக்களும் தங்களால் இயன்ற அளவு முழு ஒத்துழைப்பு கொடுத்து தங்கள் சுற்றுப்புறங்களை தூய்மையாகப் பராமரிக்க முன்வர வேண்டும். வீடு கட்டுமானப்பணிகளை மேற்கொண்டு வருபவர்கள் கான் கீரிட்டுக்காக பயன்படுத்தும் தண்ணீர் 3 நாள்களுக்கு மேல் தேங்கி இருக்காத வகையில் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும். தங்கள் வீட்டைச்சுற்றி தேங்காய் சிரட்டைகள், பிளாஸ்டிக் பொருட்கள், டயர்கள், உடைந்த மண் பானை உள்ளிட்ட தண்ணீர் தேங்கக் கூடிய பொருட்கள் இருந்தால் உடனயாக அவற்றை அப்புறப்படுத்த வேண்டும். குளிர்சாதனப் பெட்டிக்கு பின்புறம் உள்ள பெட்டியில் தேங்கும் நீரை அவ்வப்போது வெளியேற்ற வேண்டும்.

    வீட்டில் உள்ள நபர்களுக்கோ, குழந்தைகளுக்கோ காய்ச்சலுக்கான அறிகுறி இருப்பின் சுய வைத்தியம் மேற்கொள்ளாமல் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று முறையாக மருத்துவரிடம் பரிசோதனை மேற்கொண்டு அவரின் அறிவுரைப்படி மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

    இந்த ஆய்வின்போது சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர் நிர்மல்சன், நகர் நல அலுவலர் டாக்டர் ஆனந்தகண்ணன், வட்டாட் சியர் ஈஸ்வரன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். #KarurCollector
    கரூர் மாவட்டத்தில் வருகிற 14 ந்தேதி அம்மா திட்ட முகாம் நடக்கிறது என்று கலெக்டர் அன்பழகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
    கரூர்:

    கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

    கரூர் மாவட்டத்தில் மக்களை தேடி சென்று அவர்களின் கோரிக்கைகளை வருவாய்துறையினர் நிவர்த்தி செய்யும் வகையில் அம்மா திட்ட முகாம் நடந்து வருகிறது. அந்த வகையில் நாளை மறுநாள் 14-ந் தேதி அன்று குளித்தலை வட்டத்தில் மருதூர் தெற்கு கிராமத்தில் ஆதிநத்தம் அரசு நடுநிலைப்பள்ளியிலும், அரவக்குறிச்சி வட்டத்தில் புன்னம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டிடத்திலும், வருகிற 28-ந் தேதி குளித்தலை வட்டத்தில் கல்லடை கிராமத்தில் கீழ வெளியூர் நூலகத்திலும், அரவக்குறிச்சி வட்டத்தில் கொடையூர் கிராமத்தில் ஐந்து ரோடு ஊராட்சி அலுவலக கட்டிடத்திலும் அம்மா திட்ட முகாம் நடைபெறவுள்ளது. 

    அன்றைய தினங்களில் காலை 10 மணியளவில் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் தலைமையில், இந்த முகாம் நடக்கிறது. 

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். 
    மனையை வரன்முறை படுத்த தவறினால் குடிநீர், மின்சார இணைப்புகள் வழங்கப்பட மாட்டாது என்று கலெக்டர் அன்பழகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    கரூர்:

    கரூர் நகராட்சி ஆணையர் அலுவலக வளாகத்தில், நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்துதல் தொடர்பான சிறப்பு முகாம் நடந்தது. இதனை மாவட்ட கலெக்டர் அன்பழகன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

     20.10.2016-க்கு முன் ஏற்படுத்தப்பட்ட மனைகள் அல்லது அனுமதியற்ற மனைகளை வரன்முறைப்படுத்திக்கொள்ள குறைந்த அவகாசமே உள்ளதால் இந்த முகாமில் விண்ணப்பித்து பயன் பெறலாம். மனையின் கிரைய பத்திரம், பட்டா, சிட்டா, வில்லங்க சான்றிதழ், புலப்பட நகல், மனைப்பிரிவு வரைபடம் ஆகியவற்றின் நகல்களும் கரூர் நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். 

    வரன்முறைப்படுத்த தவறும் மனைப்பிரிவுகளில் அனுமதியற்ற மனைகளாக அமைவதுடன் சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவுநீர் அகற்றும் வசதி, மின்சார வசதி போன்ற வசதிகள் வழங்க இயலாது. மேலும், கட்டிட அனுமதி வழங்கப்பட மாட்டாது என்பதால் மனை உரிமையாளர்கள் வங்கிகளில் கடன் பெற இயலாது.  பத்திரப்பதிவு அலுவலகத்தில் மனையின் கிரையப்பதிவு மேற்கொள்ள இயலாது. எனவே, இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் மனைகளை வரன்முறைப்படுத்திக்கொள்ளுமாறும், கூடுதல் விவரங்களுக்கு கரூர் நகராட்சி அலுவலகத்தில் நகர அமைப்பு பகுதியினை தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.  

    இவ்வாறு அவர் கூறினார். 

    முகாமில், நகராட்சி ஆணையர் அசோக்குமார், தாசில்தார் கலியமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    ×